Friday, February 6, 2015

அம்பாறை மாவட்டத்தை காட்டிக்கொடுத்தது யார்? சத்தியம் செய்கிறார் சித்தீக் காரியப்பர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர்
ஏ.எச்.சித்தீக் காரியப்பர் தமது முகனூலில் சற்றுமுன்னர் பதிவிட்டிருந்த பதிவு ஒன்றை எமது வாசகர்களுக்காக பதிவிடுகின்ரோம்.
நன்றி: ஏ.எச்.சித்தீக் காரியப்பர்  





நான் சொல்வதெல்லாம் உண்மை 
உண்மையைத் தவிர வேறில்லை!
-----------------------------------------------------
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
-----------------------------------------------------
கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில் ஹக்கீமையோ ஹாபிஸ் நஸீரையோ குற்றஞ் சொல்லி வேலை இல்லை. கிழக்கின் முதல்வராக ஹாபிஸ் நஸீரை நியமிக்க வேண்டுமென அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர்தான் முதலில் இணக்கக் கடிதம் கொடுத்திருந்தார். நேற்று (05) அதிகாலையில் அவர் அமைச்சர் ஹக்கீமின் வீட்டுக்குச் சென்று இந்தக் கடிதத்தை வழங்கிய பின்னர் அவசர, அவசரமாக வெளியேறி விட்டார். 
எனவே, இந்த விடயத்தில் ஹக்கீமை முழுமையாக குற்றஞ் சுமத்த முடியாது. ஹாபிஸ் நஸீரை முதலமைச்சராக்க வேண்டுமென்ற விடயத்தில் கடந்த 3, 4 ஆம் திகதிகளில் தலைமைக்கு அதிக அழுத்தங்களைக் கொடுத்தவர்கள் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர்தான். இந்த அழுத்தங்கள் காரணமாகவே அமைச்சர் தனது முடிவினை அறிவிக்கும் காலக்கெடுவினையும் 72 மணித்தியாலமாக அதிகரித்திருந்தார். அத்துடன் ஹக்கீம் கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகி இருந்தார்.
இந்த இருவரில் ஒருவர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர். மற்றவர் குறுநில மன்னர் சபையைச் சேர்ந்தவர். அம்பாறை மாவட்டத்திலிருந்து ஒருவரை முதல்வராக நியமிப்பதன் மூலம் அவர் தங்களுக்கு சவாலாக வந்து விடுவார். மற்றும் தங்களது அரசியல் கஜானா காலியாகி விடும் என்ற அச்சம் இவர்களிடம் தாராளமாக காணப்பட்டதன் விளைவே இது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தின் இறுதி முடிவெடுக்கும் பொறுப்பினை அமைச்சர் ஹக்கீமிடம் வழங்குவதாக கட்சியின் அரசியல் உயர்பீடம் தீர்மானித்ததன் பின்னணிகள் கூட வேறானவை. இந்த விடயத்தில் காய்கள் சரியாக நகர்த்தப்பட்டன. ஹக்கீமிடம் முடிவெடுக்கும் பொறுப்பை வழங்குவதன் மூலம் தங்களது ஜாதகங்களையும் காரியங்களையும் சரியாக கணிக்க, சாதிக்க முடியும் என்ற அடிப்படையில்தான் இதுவும் நடந்தது. இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ஹக்கீம் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் சிலரின் வஞ்சக வலைக்குள் வீழ்த்தப்பட்டார். இதன் பின்னணியில் நான் முன்னர் குறிப்பிட்ட இரு நபர்களுமே உள்ளனர். இவைகளை நான் இங்கு பகிரங்கப் படுத்துவதற்குச் சற்று பின்வாங்கிறேன். அச்சப்படுகிறேன்.
எனவே, இந்த விடயங்கள் அனைத்தையும் நன்கு அறிந்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெமீல், ஏ.எல்.எம். நஸீர் ஆகியோர் உடனடியாக அவர்களது பெயர்களை வெளிப்படுத்தி மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டுமென நான் விரும்புகிறேன்.
மேலும் இந்த விடயத்தில் ஹாபீஸ் நஸீரை திட்டித் தீர்ப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. கிழக்கு மாகாண சபையின் முதல்வர் பதவியை எனக்கு தாருங்கள் என ஹாபிஸ் நஸீரும் கேட்கலாம், ஜெமீலும் கேட்கலாம், மன்சூரும் கேட்கலாம். தவமும் கேட்கலாம். அது அவர்களது ஜனநாயக ரீதியிலான உரிமை. இதில் எவரையும குற்றம் சொல்ல முடியாது. இதில் பிரதேசவாதமும் தேவை இல்லை.
இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அம்பாறை மாவட்டத்துக்கு துரோகம் செய்து விட்டது என்று மன ஆதங்கப்படுபவர்களே! துரோகம் செய்தது ஹக்கீமோ வெளிமாவட்டத்தினரோ அல்லர். அதே அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இருவரே. கோழி திருடிய கள்வர்கள் உங்களுடன் சேர்ந்து கொண்டே அதனை தேடிப் பிடிக்க முயற்சிக்கும் கபட நாடகம் உள்ளே நடக்கிறது ஜாக்கிரதை.
நான் நேர்மையாகவும் சத்தியம் செய்தும் கூறுகிறேன். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அழிவு என்பது இந்த இருவரால்தான் ஏற்படும். அதுவும் விரைவில் நடக்கும். தங்களது தனிப்பட்ட நலன்களுக்காக இந்தக் கட்சியை அவர்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதனை மக்கள் விரைவில் புரிந்து கொள்வர். அப்போது ஹக்கீமும் கைசேதப்படுவார். அம்பாறை மாவட்ட மக்களால் தள்ளி வைக்கப்படுவார். சத்தியம் இது சத்தியம்.
நான் சொல்லும் இந்த விடயங்கள் விரைவில் நடக்காவிட்டால். நான் மரணித்த பின்னர் அடக்கம் செய்யப்டும் எனது கப்றினை இறைவன் நெருப்புப் பாளங்களால் நிரப்பி எரிய வைத்து என்னை வேதனைப்படுத்தட்டும். சத்தியம்.. இது சத்தியம்.
குறித்த இருவரையும் நம்பி ஹக்கீம் செயற்படுவதன் விளைவுகளையும் அவர் அனுபவித்தே தீருவார்.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

0 comments:

Post a Comment